ஸ்ரீ விருத்தகிரிஸ்வரர் கோயில்

விருத்தாசலம் - 606001

ஸ்ரீ விருத்தகிரிஸ்வரர் கோயில்

வரலாறு

வரலாறு

தல வரலாறு

தல வரலாறு

அப்பர், சம்பந்தர், சுந்தரர் காலத்தில் இத்தலம் பழமலை என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் "விருத்தாசலம்' என வடமொழி சொல்லால் அழைக்கப்பட்டது. "விருத்தம்' என்றால் "பழமை'. "அசலம்'  என்றால் "மலை'. காலத்தால் மிகவும் முற்பட்டது இந்த மலை.  சிவபெருமான் முதன் முதலில் இங்கு மலை வடிவில் தான்   தோன்றினார் என்றும், இந்த மலை தோன்றிய பின்பு தான் உலகில் உள்ள அனைத்து மலைகளும் தோன்றியது என்றும், திருவண்ணாமலைக்கும் முந்திய மலை என்றும் புராணங்கள் கூறுகின்றன.


இத்தலம் முன்பொரு காலத்தில் குன்றாக இருந்ததாம்.விபசித்து முனிவர் முத்தா நதியில் மூழ்கி இரவு திருக்கோயிலில் தங்கியதால் அருள் கிடைக்கப்பெற்று திருப்பணி செய்யும் பேறு பெற்றார்.இத்திருக்கோயிலில் தலமரமாக உள்ள வன்னி மரத்தின் இலைகளை திருக்கோயிலின் திருப்பணியின்போது விபசித்து முனிவர் தொழிலாளருக்கு வழங்க அந்த இலைகள் அவர்களின் உழைப்பிற்கு ஏற்றவாறு பொற்காசுகளாக மாறியது என்றும் மரபுவழியாகப்பேசப்பட்டு வருவதாகும்.இந்த வன்னிமரம் 1700 ஆண்டுகளுக்கு முன்பானது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


இத்தலத்து ஈசனான முதுகுன்றப்பெருமானை பாட மறுத்துச் சென்ற சுந்தரரை இறைவன் தடுத்து ஆட்கொண்டு தன்னை பாட வைத்து பன்னீராயிரம் பொன் கொடுத்ததோடு அல்லாமல் "மணி முத்தா நதியில் அவற்றை போட்டு திருவாரூர் குளத்தில் எடுத்துக்கொள்' என்று சொல்ல சுந்தரர் பொன்னை பெற்றுக் கொண்டார் என்பது தலவரலாற்றுச் செய்தி.


தலபெருமை

தலபெருமை

சக்கரங்கள் அமைந்த முருகப்பெருமான் : ஈசன் சன்னதிக்கும் விருத்தாம்பிகை சன்னதிக்கும் இடையில் அமைந்து உள்ளது 28 சிவலிங்கங்களுடன் உடனுறையும் முருகன் வள்ளி தெய்வானை காட்சியாகும். முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் நின்ற திருக்கோலக்காட்சியும் 28 சிவலிங்கங்கள் ஆகம விதிப்படி அமையப்பெற்று அனைவராலும் வணங்கப்பட்டு வருவது மிகவும் சிறப்பிற்குரியதாகும். நின்ற திருக்கோலத்தில் உள்ள முருகப்பெருமானின் உடனுறைக்கு மேலே சக்கரங்கள் அமைந்தது எல்லா வளமும் கிட்டும் என்பதை நினைவுறுத்துகின்றன. இது போல சக்கரங்கள் அமைந்திருப்பது சில திருத்தலங்களில் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாமே ஐந்து:
இக்கோயிலில் எல்லாமே ஐந்துதான்.

ஐந்து மூர்த்தங்கள்: விநாயகர், முருகன், சிவன், சக்தி, சண்டிகேஸ்வரர்.

இறைவனின் ஐந்து திருநாமம்:
விருத்தகிரீஸ்வரர், பழமலைநாதர்,விருத்தாசலேஸ்வரர், முதுகுன்றீஸ்வரர்,  விருத்தகிரி.

ஐந்து விநாயகர்:
ஆழத்து விநாயகர், மாற்றுரைத்த விநாயகர்,  முப்பிள்ளையார், தசபுஜ கணபதி, வல்லப கணபதி.

இறைவனை தரிசனம் கண்ட ஐவர்: உரோமச முனிவர், விபசித்து   முனிவர், குமார தேவர், நாத சர்மா, அனவர்த்தினி.

ஐந்து கோபுரம்:
கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் கண்டராதித்தன் கோபுரம்.

ஐந்து பிரகாரம் (திருச்சுற்று): தேரோடும் திருச்சுற்று, கைலாய  திருச்சுற்று,  வன்னியடி திருச்சுற்று, அறுபத்து மூவர் திருச்சுற்று, பஞ்சவர்ண திருச்சுற்று.

ஐந்து கொடிமரம்:
இந்த கொடி மரங்களின் முன்புள்ள நந்திகளுக்கு  இந்திரநந்தி, வேதநந்தி, ஆத்மநந்தி, மால்விடைநந்தி, தர்மநந்தி என்று  பெயர்.

ஐந்து உள் மண்டபம்: அர்த்த மண்டபம், இடைகழி மண்டபம், தபன மண்டபம், மகா மண்டபம், இசை மண்டபம்.

ஐந்து வெளி மண்டபம்: இருபது கால் மண்டபம், தீபாராதனை மண்டபம்,     நூற்றுக்கால் மண்டபம், விபசித்து மண்டபம், சித்திர மண்டபம்.

ஐந்து வழிபாடு: திருவனந்தல், காலசந்தி, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்தஜாமம்.

ஐந்து தேர்: விநாயகர் தேர், முருகன் தேர், பழமலை நாதர் தேர்,  பெரியநாயகி தேர், சண்டிகேஸ்வரர் தேர்.

தலத்தின் ஐந்து பெயர்:
திருமுதுகுன்றம், விருத்தகாசி,  விருத்தாசலம், நெற்குப்பை, முதுகிரி.

முத்தா நதியில் பொன் :  ஒருமுறை, சுந்தரர் திருவாரூரில் நடக்கும் பங்குனி உத்திர விழவில் அடியார்களுக்கு அன்னதானம் செய்ய பொருள் சேகரிக்க ஒவ்வொரு தலமாகச் சென்றார். இத்தலம் வரும் போது இறைவன் சுந்தரருக்கு 12 ஆயிரம் பொன்னைத் தந்தார். திருவாரூர் செல்லும் வழியில் கள்வருக்கு பயந்து, இந்த பொன் அனைத்தையும் இங்குள்ள மணிமுத்தா நதியில் போட்டு விட்டு இறைவனின் அருளால் திருவாரூர் குளத்தில் மூழ்கி எடுத்தார். இதை அடிப்படை யாகக் கொண்டே, "ஆற்றிலே போட்டு குளத்தில் தேடுவது போல்' என்ற பழமொழி தோன்றியது.இறைவன் தந்த பொன் மாற்றுக்குறையாத தங்கம்தானா என்று சுந்தரர் மனம் அலைபாய்ந்ததை உணர்ந்த இறைவன் நம்பிக்கைக்காக தும்பிக்கை நாயகனை சாட்சியாக அமைத்து பொன்னை மாற்றுறைத்து காட்டினார். திருவாரூர் குளத்தில் பெற்றுக் கொள்ளவும் செய்தார். எனவேதான் இத்தலத்தில் உள் சுற்று பிரகாரத்தில் அமைந்துள்ள விநாயக பெருமான் மாற்றுரைத்த விநாயகர் என்ற பெயரோடு விளங்குகிறார்.


முருகன் சிவனை பூஜித்த தலம் இது. இறைவனது அருளால் சுந்தரர் பெற்ற பன்னீராயிரம் பொற்காசுகளை கள்வருக்கு பயந்து இந்நதி(மணிமுத்தா)யில் போடப் பெற்று பின்னர் திருவாரூர் குளத்தில் கிடைக்கப் பெற்றாராம். விபசித்து முனிவரால் திருப்பணி செய்யப்பட்ட திருக்கோயில் முதுகுன்றத் திருக்கோயில் ஆகும். மணி முத்தா நதிக்கரையில் அமைந்த முதுகுன்றம் என்பதுதான் பழமலை ஆகும். மற்ற சிவ தலங்களில் துர்க்கை அம்மன் சிவன் கோயிலில் ஆட்சி செய்வதாக அமைந்தி ருக்கும். ஆனால் இந்த முதுகுன்றத்தில் துர்க்கை உமையவளான விருத்தாம் பிகையின் வடக்கு பக்கத்தில் நின்ற கோலத்தில் இருந்து அருளாட்சி செய்வது சிறப்பு வாய்ந்தது ஆகும்.


ஒருமுறை உலகம் அழிந்த போது இந்தத்தலம் மட்டும் அழியாமல் இருந்தது என்ற புராணச்  சிறப்பைப் பெற்றது.  சிவத்தலங்கள் அனைத்திலும் 1008 தலங்கள் சிறப்பானதாக கூறப்படும். இதில் நான்கு தலங்கள் முக்கியமானவை. அதில் விருத்தாசலமும் ஒன்று. தேவர்களுக்காக இறைவன் இங்கு நடனம் ஆடியுள்ளார். சிதம்பரத்தில் சிவன் போட்டிக் காக ஆடிய தலம் என்றும், இத்தலம் சிவன் சந்தோஷத்திற்காக ஆடிய தலம் என்றும் கூறுவர்.  இங்குள்ள அர்த்த மண்டபத்தில் 4 வேதங்களே 4 தூண்களாக  அமைந்துள்ளன. தல விருட்சம் வன்னிமரம் 3ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.  இக்கோயிலில் திருப்பணி செய்த விபசித்த முனிவர், தன் வேலையாட்களுக்கு சம்பளமாக இம்மரத்தின் இலைகளை பறித்து தருவார். அது அவரவர் உழைப்புக்கு ஏற்ப பொற்காசுகளாக மாறிவிடுமாம்.


இத்தல தீர்த்தமான மணிமுத்தாறு நதியில், இறந்தவர்களின் அஸ்தியை கரைத்தால், அது கல்லாக மாறி நதியிலேயே தங்கிவிடுவதாக தல புராணம் சொல்கிறது.  பெரியநாயகி யம்மை பதிகம், க்ஷேத்திரக் கோவை வெண்பா, பழமலை நாதர் அந்தாதி, பெரியநாயகி விருத்தம், கலித்தொகை, பிட்சாடன  நவமணி மாலை, குருதரிசனப்பதிகம், பிள்ளைத் தமிழ் ஆகிய  நூல்களும் இத்தலத்திற்குரியது.  கர்நாடக மன்னன் இத்தலம் வந்த போது பசியால் வாடினான். அப்போது பெரியநாயகி இளமை வடிவெடுத்து பாலூட்டி அவனுக்கு குமார தேவர் என்று பெயர் சூட்டினாள்.


முக்திதலம் :  காசியைப்போன்று விருத்தாசலமும் முக்தி தலமாகும். இங்குள்ள  மணிமுத்தாறு நதியில் நீராடி மூலவர் பழமலைநாதரை வழிபட்டால், காசியில் நீராடி விஸ்வநாதரை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே  இத்தலம் "விருத்தகாசி ' என்றும் அழைக்கப்படுகிறது. இதனால் "காசியை விட வீசம் அதிகம் விருத்தகாசி' என்ற பழமொழி கூட உண்டு. இத்தலத்தில் இறக்கும் உயிர்களை அன்னை விருத்தாம்பிகை தன் மடியில் வைத்து, தன் புடவைத்  தலைப்பால் விசிறி அவைகளின் பாவங்களை விலக்குகிறாள். சிவபெருமான் அருகே அமர்ந்து கொண்டு, உயிர்கள் மோட்சம டைவதற்காக "நமசிவாய' எனும் பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசிக்கிறார் என தலபுராணம் கூறுகிறது.


பாலாம்பிகை : யுகம் கண்ட தலமான இங்குள்ள அம்மனின் திருநாமம்   விருத்தாம் பிகை. ஒருமுறை திருவண்ணா மலையிலிருந்து சிதம்பரம் செல்ல வந்த குரு நமச்சிவாயர், இத்தலத்தில் இரவு தங்கினார்.   அப்போது அவருக்கு பசி ஏற்பட்டது. பசியை போக்க, இத்தல  பெரியநாயகியிடம் சோறு வேண்டி, "கிழத்தி' என்ற சொல் வரும்படி  ஒரு பாடல் பாடினார். இதைக்கேட்ட பெரியநாயகி கிழவி  வேடத்தில் அங்கு வந்து, ""கிழவி எவ்வாறு சோறு கொண்டு வர முடியும்?   இளமையுடன் இருந்தால் தான் நீ  கேட்டது கிடைக்கும்,''என கூறி மறைந்தாள். இதைக்கேட்ட குரு நமச்சிவாயர்,"அத்தன் இடத்தாளே, முற்றா இளமுலை மேலார வடத்தாளே சோறு கொண்டு வா''என பாடினார். இந்த பாட்டில் மயங்கிய அம்மன் இளமைக்கோலத்துடன் அவருக்கு காட்சி கொடுத்து சோறு போட்டாள். அன்று முதல் "பாலாம்பிகா' என்ற பெயர் இவளுக்கு ஏற்பட்டது.


இத்தலத்து முருகப்பெருமான் (சுப்ரமணியர்) குறித்து அருணகிரிநாதர் பத்து திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்.  குமார தேவர், குருநமச்சிவாயர், சிவப்பிரகாசர், ராமலிங்க அடிகளார் ஆகியோரும் பாடியுள்ளனர்.


முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் ராஜகோபுரத்தை அடுத்து இடது பக்கம் உள்ள ஆழத்து விநாயகர் சன்னதி விநாயகரின் இரண்டாவது படை வீடாகும்.


கோயில் விவரங்கள்

ஸ்ரீ விருத்தகிரிஸ்வரர் கோயில்

விருத்தாசலம் - 606001

+91- 4143-230 203

விரைவு இணைப்புகள்

வரலாறு

திருவிழா

பூஜை

Designed by AnnaaSiliconTechnology.Pvt.Ltd.,

Top